வெறும் 20 ரூபாய் லஞ்சம் பெற்றதாக சுமத்தப்பட்ட பழியிலிருந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட ஓய்வுபெற்ற காவலர், தீர்ப்பு வந்த மறுநாளே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் வேஜல்பூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றியவர் பாபுபாய் பிரஜாபதி. கடந்த 1996-ஆம் ஆண்டு இவர் மீது 20 ரூபாய் லஞ்சம் பெற்றதாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக 1997-இல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, 2004-இல் செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து பாபுபாய் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். சுமார் 22 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த மேல்முறையீட்டு மனு மீது, கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி (2026) உயர் நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியது.
சாட்சிகளின் முன்னுக்குப் பின் முரணான வாக்குமூலங்கள் மற்றும் போதிய ஆதாரங்கள் இல்லாததைக் குறிப்பிட்ட நீதிமன்றம், பாபுபாய் பிரஜாபதியை ‘நிரபராதி’ என அறிவித்து கௌரவமாக விடுவித்தது.
நீதிமன்றத் தீர்ப்பைக் கேட்ட பாபுபாய் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டார். தனது வழக்கறிஞர் நிதின் காந்தியிடம் கண்ணீர்மல்கப் பேசிய அவர், “இத்தனை காலப் பழி நீங்கிவிட்டது. இனி இறைவன் என்னை அழைத்துக்கொண்டாலும் எனக்குக் கவலையில்லை” என்று உருக்கமாகக் கூறியுள்ளார். இந்த நெகிழ்ச்சியான தருணம் அங்கிருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது.
நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிய பாபுபாய், துரதிர்ஷ்டவசமாக அடுத்த நாள் அதிகாலையில் இயற்கை எய்தினார்.
இது குறித்து அவரது வழக்கறிஞர் கூறுகையில், “தீர்ப்பு வந்த அன்று அவர் மிகுந்த நிம்மதியுடன் இருந்தார். அரசாங்கத்திடமிருந்து கிடைக்க வேண்டிய சலுகைகளுக்கு விண்ணப்பிக்குமாறு நான் அவரிடம் கூறினேன். ஆனால், ‘பழி நீங்கியதே எனக்குப் போதும்’ என்று அவர் கூறினார். அடுத்த நாள் காலை சில ஆவணங்கள் தொடர்பாக அவரைத் தொடர்பு கொண்டபோதுதான், அவர் மறைந்த செய்தி தெரிந்தது” என வருத்தத்துடன் தெரிவித்தார்.
30 ஆண்டு காலப் போராட்டத்திற்குப் பிறகு நீதி கிடைத்தாலும், அந்த நீதியை அனுபவிக்கக் கூட அவருக்குக் கால அவகாசம் கிடைக்காதது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
