உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில், வீட்டுப்பாடம் (Homework) செய்யவில்லை என்பதற்காக இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவனை ஆசிரியர் ஒருவர் 105 பிரம்படிகளால் அடித்துத் துன்புறுத்திய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது சத்ரோலி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜ் பிரசாத் கோஸ்வாமி. இவருடைய 10 வயது மகன் அபிஷேக், அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வருகிறான். கடந்த புதன்கிழமை சமூக அறிவியல் வகுப்பிற்கு வந்த ஆசிரியர் பிரகர் சிங் (38), மாணவர்கள் வீட்டுப்பாடம் செய்துள்ளனரா என ஆய்வு செய்துள்ளார். அப்போது அபிஷேக் வீட்டுப்பாடம் செய்யாததைக் கண்டு ஆத்திரமடைந்த ஆசிரியர், தாலிபான் முறையிலான கொடூர தண்டனையை மாணவனுக்கு அளித்துள்ளார்.
மாணவனின் கால்களில் கணக்கிட்டு 105 முறை பிரம்பால் ஆசிரியர் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்து மாணவன் கதறி அழுததைக் கண்டு, அவனுக்கு ஒரு பிஸ்கட் பாக்கெட்டை வழங்கிய ஆசிரியர், “இதைப்பற்றி வீட்டில் சொன்னால் நாளை மீண்டும் அடிப்பேன்” என மிரட்டியும் உள்ளார்.
வீடு திரும்பிய சிறுவன் அழுதுகொண்டே நடந்ததைக் கூற, அதிர்ச்சியடைந்த தந்தை உடனடியாகப் பள்ளிக்குச் சென்று புகார் அளித்துள்ளார். ஆனால், பள்ளி முதல்வர் மாதவ்ராஜ் என்பவர் மாணவனின் தந்தையைத் திட்டி அங்கிருந்து துரத்தியுள்ளார். இதையடுத்து, சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, குற்றச்சாட்டிற்குள்ளான ஆசிரியர் பிரகர் சிங்கை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
