வாட்ஸ்அப் செயலியில் உதவி மையம் பேசுவதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றும் புதிய வகை ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதால், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வாட்ஸ்அப் நிறுவனத்தின் பெயரில் வரும் குறுஞ்செய்திகளை நம்பி வங்கி கணக்கு விவரங்கள், ரகசிய குறியீடுகள் மற்றும் தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, தொழில்நுட்பம் குறித்து போதிய அறிவு இல்லாத முதியவர்கள் இத்தகைய மோசடிகளில் எளிதில் சிக்கிக்கொள்கின்றனர். இந்நிலையில் ஹாய்…நான் வாட்ஸ்-அப் சப்போர்ட் பேசுகிறேன்… என்று வாட்ஸ்-அப் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி பேசியும் சிலர் நூதன மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுபோன்ற மெசேஜ் வந்தால் நம்ப வேண்டாம், அந்த எண்ணை வாட்ஸ்-அப் செயலியில் பிளாக் செய்துவிட்டு போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்களை போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களை ஒருபோதும் நேரடியாகத் தொடர்பு கொள்வதில்லை என்பதைப் பொதுமக்கள் நினைவில் கொள்ள வேண்டும். இத்தகைய மோசடிகளால் பாதிக்கப்பட்டால், வாட்ஸ்அப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ அல்லது 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணிலோ உடனடியாகப் புகார் அளிக்கலாம்.
மேலும், மத்திய அரசின் இணையதளமான சைபர் கிரைம் இணையதளம் வாயிலாகவும் பொதுமக்கள் தங்கள் புகார்களைப் பதிவு செய்யலாம். நிதி இழப்புகள் மற்றும் தனிப்பட்ட தரவு திருட்டுகளைத் தவிர்க்க தேவையற்ற இணைப்புகளைக் கிளிக் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
