விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் பகுதியில் நேற்று அரசியல் வட்டாரத்தை அதிர வைக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. எப்போதும் எதிருப்புதிருமாக மோதிக்கொள்ளும் விசிக மற்றும் பாமக ஆகிய இரு கட்சிகளுக்கு இடையே இந்த முறை விசிக தரப்பில் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. விசிக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா. ஞானவேல் தலைமையில் சுமார் 1001 இளைஞர்கள் திடீரென தங்கள் தாய் கட்சியில் இருந்து விலகி, பாமகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற்ற இந்த இணைவு விழாவில், பாமக நிர்வாகிகள் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தலித் அரசியலில் வலுவான இடத்தைப் பிடித்துள்ள விசிக-விலிருந்து இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இளைஞர்கள் பாமக-வுக்குத் தாவியது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் ஒரு மாநில அளவிலான நிர்வாகியே முன்னின்று இந்த மாற்றத்தை நிகழ்த்தியது விசிக தலைமைக்கு விழுந்த பலத்த அடியாகப் பார்க்கப்படுகிறது. 2026 தேர்தலுக்கு முன்பே தென்மாவட்டங்களில் இது போன்ற கட்சித் தாவல்கள் அதிகரிப்பது, வரப்போகும் தேர்தல் களம் இன்னும் ரணகளமாக இருக்கப்போகிறது என்பதையே காட்டுகிறது.
