தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை திமுக தரப்பு ரகசியமாகத் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியாகும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மூத்த திமுக தலைவர் ஓபிஎஸ்ஸிடம் பேசி, புதிய கட்சி தொடங்கி கூட்டணியில் இணையுமாறு அல்லது நேரடியாக திமுகவிலேயே இணைந்து செயல்படுமாறு அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தவெக மற்றும் நாம் தமிழர் போன்ற கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதால், வாக்குகள் சிதறுவதைத் தவிர்க்க ஓபிஎஸ்ஸை இழுக்க முதல்வர் ஸ்டாலின் ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது. இருப்பினும், இந்த விவகாரத்தில் திமுகவிற்குள்ளேயே சில முரண்பட்ட கருத்துக்கள் எழுந்துள்ளன. தென்மாவட்ட அமைச்சர் ஒருவர் அளித்த அறிக்கையில், ஓபிஎஸ்ஸுக்கு இப்போது செல்வாக்கு குறைந்துவிட்டதாகவும், அவரால் அதிமுகவின் வெற்றியை பெரிய அளவில் பாதிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

ஆனாலும், குறிப்பிட்ட சமூக வாக்குகளைக் குறிவைத்து திமுக இந்த நகர்வை மேற்கொண்டு வருகிறது. இன்னொரு பக்கம், தன்னை முதல்வராக்கிய அதிமுகவின் பரம எதிரியான திமுகவுடன் இணைவதில் ஓபிஎஸ் கடும் தயக்கத்தில் உள்ளார். எடப்பாடி பழனிசாமி தன்னை மீண்டும் சேர்க்க மறுத்தாலும், அதிமுக அடையாளத்தோடு இருக்கவே அவர் விரும்புவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.