தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி நீடித்து வந்தாலும், வரும் தேர்தலில் தலைமைப் பொறுப்பு யாருக்கு என்பதில் இப்போது கடும் மல்லுக்கட்டு ஏற்பட்டுள்ளது.

“தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் திராவிட மாடல் ஆட்சியை நிறுவுவோம்” என திமுக தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் கட்சியினரை உசுப்பேற்றி வருகிறார். 25 ஆண்டுகளுக்குப் பிறகு புதுவையில் தனித்து ஆட்சியைப் பிடிக்க திமுக தீவிரம் காட்டி வருகிறது.

சமீபத்தில் புதுச்சேரியில் கூட்டணி கட்சிகளான விசிக, இடதுசாரிகளுடன் திமுக நடத்திய பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் அழைக்கப்படவில்லை. இது காங்கிரஸை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், “கூட்டணியில் 8% வாக்கு வைத்துள்ள கட்சி தலைமை தாங்குமா? இல்லை 26% வாக்கு வைத்துள்ள கட்சி தலைமை தாங்குமா?” என திமுகவை மறைமுகமாகச் சாடியுள்ளார்.

இதற்கு திமுக தரப்பு, “கடந்த சட்டமன்றத் தேர்தலில் எங்களின் வாக்கு சதவீதம் உங்களை விட அதிகம். தற்போது சட்டசபையில் எங்களுக்கு 6 எம்.எல்.ஏக்கள் உள்ளனர், உங்களுக்கு 2 தான். அப்படியிருக்க யார் தலைமை தாங்க வேண்டும் என்பது மக்களுக்கே தெரியும்” என பதிலடி கொடுத்து வருகிறது.