பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கழிவுநீர்க் கால்வாய் மூடிகள் திருடப்படுவதால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க முதலமைச்சர் மரியம் நவாஸ் கடும் சட்ட நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். லாகூரில் திறந்திருந்த பாதாளச் சாக்கடையில் விழுந்து தாயும் குழந்தையும் உயிரிழந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

கழிவுநீர்க் கால்வாய் மூடிகளைத் திருடுபவர்கள், வாங்குபவர்கள் அல்லது விற்பனை செய்பவர்களுக்கு ஓராண்டு முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஒரு மூடியில் இருக்கும் சுமார் 30 கிலோ எடையுள்ள இரும்பு வளையத்திற்காக இவை திருடப்பட்டு பழைய இரும்பு கடைகளில் விற்கப்படுகின்றன.

இத்தகைய திருட்டுச் சம்பவங்களால் ஏற்படும் விபத்துகளில் உயிரிழப்பு நேரிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் அபராதம் விதிக்கவும், இந்த சட்டவிரோத வணிகத்தில் ஈடுபடும் தொழிற்சாலைகளுக்குப் பத்து கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் புதிய சட்ட மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.