மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தனசேகரன் (எ) செந்தில், இன்று காலை தனது டீக்கடையிலேயே மர்ம கும்பலால் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். வழக்கம் போல இன்று காலை கடையைத் திறந்திருந்த தனசேகரனை நோக்கி வந்த ஒரு கும்பல், கண் இமைக்கும் நேரத்தில் அவரைச் சரமாரியாக வெட்டிச் சாய்த்தது. இதில் அவரது தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்தத் துணிகரக் கொலைச் சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொலைச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், மதுரையில் ஒரு அரசியல் பிரமுகர் இப்படிப் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டது பேசுபொருளாகியுள்ளது. இது முன்விரோதம் காரணமாக நடந்த படுகொலையா அல்லது அரசியல் பின்னணி ஏதும் இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். திருப்பரங்குன்றம் பகுதியில் பதற்றம் நிலவுவதால் அசம்பாவிதங்களைத் தவிர்க்கப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
