நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘புலி’ படத்திற்காக அவர் பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை முறையாகக் கணக்கில் காட்டவில்லை என வருமான வரித்துறை குற்றம் சாட்டியிருந்தது. இதன் அடிப்படையில், வருமானத்தை மறைத்ததற்காக அவருக்கு 1.50 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில், இன்று (பிப்ரவரி 6) காலை 10:30 மணிக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பை வழங்குகிறார்.
அரசியல் வருகையை அறிவித்துத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் விஜய்க்கு, இந்த பழைய வருமான வரி வழக்கு ஒரு முக்கிய சவாலாகப் பார்க்கப்படுகிறது. அபராதம் உறுதி செய்யப்படுமா அல்லது விஜய்யின் மனு ஏற்கப்பட்டு அவருக்கு நிவாரணம் கிடைக்குமா என்பதுதான் இப்போதைய ஹாட் டாபிக். ஒருவேளை தீர்ப்பு எதிராக அமைந்தால், அது அரசியல் ரீதியாகவும் விமர்சனங்களை உருவாக்க வாய்ப்புள்ளதால் ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தினர் மத்தியில் இன்று காலை முதலே பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. நீதிபதியின் தீர்ப்புக்காக ஒட்டுமொத்த தமிழகமே இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தை நோக்கித் திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
