வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் இந்தியாவை மிரட்ட முடியாது என்றும், தேவைப்பட்டால் டிரம்பின் பதவிக்காலம் முடியும் வரை காத்திருக்கத் தயார் என்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் அமெரிக்க அமைச்சரிடம் திட்டவட்டமாகத் தெரிவித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியதைத் தொடர்ந்து, அதிபர் டிரம்ப் இந்தியா மீதான இறக்குமதி வரியை அதிரடியாக 50 சதவீதமாக உயர்த்தினார். இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது. இந்தியாவுக்குப் பல்வேறு மிரட்டல் தொனியில் டிரம்ப் பேசி வந்த நிலையில், வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முட்டுக்கட்டையில் முடிந்தன.
இந்தச் சூழலில், பதற்றத்தைத் தணிக்க கடந்த செப்டம்பர் மாதம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் அமெரிக்கா சென்றார். அங்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவைச் சந்தித்துப் பேசினார். இது குறித்து ‘ப்ளூம்பெர்க்’ நிறுவனம் வெளியிட்டுள்ள ரகசியத் தகவல்கள் பின்வருமாறு: வர்த்தக விவகாரத்தில் அதிபர் டிரம்ப்போ அல்லது அவரது உதவியாளர்களோ இந்தியாவை மிரட்ட முடியாது. கடந்த காலங்களில் இதைவிடக் கடினமான அமெரிக்க நிர்வாகங்களை இந்தியா கையாண்டுள்ளது.
சரியான ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், டிரம்பின் பதவிக்காலம் முடியும் வரை காத்திருக்கவும் இந்தியா தயங்காது. அஜித்தோவலின் இந்தத் திட்டவட்டமான மற்றும் துணிச்சலான நிலைப்பாடு அமெரிக்கத் தரப்பை அதிர வைத்தது.
அஜித்தோவலின் சந்திப்புக்குப் பிறகு, கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி பிரதமர் மோடிக்குத் தொலைபேசி வாயிலாக டிரம்ப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஒரு ஆண்டு காலம் நீடித்த பேச்சுவார்த்தையின் முடிவில், தற்போது இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. மேலும் இதன் பயனாக, இந்தியா மீதான வரியை 50 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைப்பதாக டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.
