ஓமன் நாட்டில் பணியாற்றி வரும் கர்நாடகத்தைச் சேர்ந்த சாந்தனு மட்டு என்ற இளைஞர், ஐக்கிய அரபு அமீரகத்தின் புகழ்பெற்ற லாட்டரி குலுக்கலில் 49 கோடி ரூபாய் பரிசு வென்றுள்ளார். கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கடந்த 8 ஆண்டுகளாக ஓமனில் உள்ள கடை ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்த சாந்தனு, தனது நண்பருடன் இணைந்து வாங்கிய லாட்டரி சீட்டிற்கு இந்த முறை முதல் பரிசு கிடைத்துள்ளது. குலுக்கலில் வெற்றி பெற்ற விவரத்தை அதிகாரிகள் தொலைபேசி வாயிலாகத் தெரிவித்தபோது, அதனை நம்ப முடியாமல் அவர் திகைப்படைந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றிக்குத் தனது ஒரு மாத காலப் பெண் குழந்தையே காரணம் என்று சாந்தனு நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் அவருக்குப் பெண் குழந்தை பிறந்த நிலையில், குழந்தை பிறந்த ராசியால் தமக்கு இந்த அதிர்ஷ்டம் கிட்டியுள்ளதாக அவர் பெருமிதம் கொள்கிறார்.
இதுவரை தனது மகளை நேரில் பார்க்காத அவர், விரைவில் ஊருக்குச் சென்று குழந்தையின் பெயர் சூட்டும் விழாவில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளார். 49 கோடி ரூபாய் பரிசுத் தொகையை என்ன செய்வது என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும், இருப்பினும் தன்னுடன் இணைந்து டிக்கெட் வாங்கிய நண்பருக்குப் பணத்தைப் பகிர்ந்து அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இதுபோன்ற லாட்டரி குலுக்கல்களில் பங்கேற்று வரும் நிலையில், உடுப்பி இளைஞரின் இந்த வெற்றி சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தமக்குக் கிடைத்துள்ள இந்தத் தொகையைக் கொண்டு குடும்பத்தின் எதிர்காலத்தை வளமாக்கப் போவதாகக் கூறியுள்ள அவர், அதே சமயம் தனது தற்போதைய பணியைத் தொடர்ந்து செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடின உழைப்புக்குக் கிடைத்த வெகுமதியாக இதைக் கருதுவதாகவும், இன்ப அதிர்ச்சியிலிருந்து தாம் இன்னும் மீளவில்லை என்றும் சாந்தனு தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.
