சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார், நகை திருட்டுப் புகார் தொடர்பாகத் தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ தரப்பில், போலீஸ் காவலில் அஜித்குமார் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், நகை திருட்டு எதுவும் நடக்கவில்லை என்பதும், பொய்ப் புகாரில் அவர் தாக்கப்பட்டதும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஎஸ்பி உத்தரவின் பேரில் போலீசார் அஜித்குமாரைத் தாக்‌கியதாகவும், இதில் பத்து போலீஸ்காரர்களுக்குத் தொடர்பு இருப்பதாகவும் சிபிஐ தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே மானாமதுரை தனிப்படை போலீசார் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தனது மகன் திருடன் இல்லை என்று நீதிமன்றம் கூறியிருப்பது ஆறுதல் அளிப்பதாக அஜித்குமாரின் தாயார் மாலதி கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.

திருப்புவனத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பொய்ப் புகார் அளித்த பெண்ணைக் கைது செய்ய வேண்டும் என்றும், தனது மகனைத் தாக்கச் சொன்ன உயர் அதிகாரி யார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

வைராக்கியத்துடன் வளர்த்த தனது மகனை அநியாயமாகக் கொன்ற போலீசார் எவரும் சிறையிலிருந்து வெளியே வரக்கூடாது என்றும், அவர்களுக்குத் தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.