தொழில்நுட்ப உலகின் ஜாம்பவான் பில் கேட்ஸ், மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தான் கொண்டிருந்த தொடர்பிற்காக மீண்டும் ஒருமுறை பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில், எப்ஸ்டீனுடன் பலமுறை சந்திப்புகளை நடத்தியது ஒரு மிகப்பெரிய தவறு என்றும், அதற்காக தான் மிகவும் வருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உலகளாவிய சுகாதாரப் பணிகளுக்காக நிதி திரட்டும் நோக்கத்தில் மட்டுமே அவரைச் சந்தித்ததாகக் கூறிய பில் கேட்ஸ், அந்தச் சந்திப்புகள் எப்ஸ்டீனுக்கு ஒருவித சமூக அங்கீகாரத்தை வழங்க உதவியிருக்கலாம் என்பதை ஒப்புக்கொண்டதோடு, அத்தகைய நபருடன் பழகியது தனது வாழ்நாளின் மிகப்பெரிய தவறுகளில் ஒன்று என உருக்கமாகத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பில் கேட்ஸின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனால் அவரது முன்னாள் மனைவி மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ், தங்களது விவாகரத்து முடிவுக்கு எப்ஸ்டீனுடனான பில் கேட்ஸின் தொடர்பும் ஒரு முக்கிய காரணம் என்பதை முன்னரே வெளிப்படுத்தியிருந்தார். எப்ஸ்டீனின் செயல்பாடுகள் மற்றும் அவரது பின்னணி குறித்து முழுமையாகத் தெரிந்தும் அவருடன் தொடர்பு வைத்திருந்தது தவறு என்பதை தற்போது கேட்ஸ் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் மனிதாபிமானப் பணிகளுக்காகச் செய்த இந்த முயற்சி, தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்துவிட்டதை உணர்ந்து, இனிவரும் காலங்களில் இத்தகைய தவறுகள் நிகழாமல் பார்த்துக் கொள்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.