உடல் பராமரிப்பு சாதனங்கள் தொடர்பாக தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் சண்டைகள் சாதாரணமாகக் கருதப்பட்டாலும், உத்தரப்பிரதேசத்தில் ஒரு வினோதமான சம்பவம் நீதிமன்றப் படி ஏறியுள்ளது. ஆக்ராவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் தனக்கு ‘பாடி லோஷன்’ வாங்கித் தர மறுப்பதாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் பலமுறை கேட்டும் கணவர் அதனைப் பொருட்படுத்தாததால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், இது தனது அடிப்படைத் தேவையைப் புறக்கணிக்கும் செயல் எனக் கூறி விவாகரத்து கோரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது குடும்ப நல நீதிமன்றத்தின் ஆலோசனைக் மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கு நடந்த விசாரணையில், கணவர் தரப்பில் நிதி நெருக்கடி காரணமாகவே உடனடியாக வாங்கித் தர முடியவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஒரு சிறிய அழகு சாதனப் பொருளுக்காகத் தம்பதியினர் பிரிந்து செல்லும் முடிவை எடுத்தது அங்கிருந்த அதிகாரிகளையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது இருவருக்கும் இடையே சமரசம் செய்து வைக்க அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். சிறிய தேவைகள் கூட கவனிக்கப்படாதபோது அவை எப்படிப் பெரிய குடும்பப் பிரச்சினையாக உருவெடுக்கின்றன என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளது.
