ராஜஸ்தான் மாநிலத்தில் புதுமாப்பிள்ளை ஒருவர் கார் மோதி உயிரிழந்ததாகக் கூறப்பட்ட வழக்கில், திடுக்கிடும் திருப்பமாக அவரது மனைவியே காதலனுடன் சேர்ந்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. மேகாலயாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ‘ஹனிமூன் படுகொலை’ பாணியிலேயே இச்சம்பவமும் அரங்கேறியுள்ளது காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கங்காநகர் பகுதியைச் சேர்ந்த ஆஷிஷ் – அஞ்சு (23) தம்பதிக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த ஜனவரி 30-ஆம் தேதி இரவு, உணவகத்திற்குச் சென்றுவிட்டு இருவரும் சாலை ஓரம் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத கார் மோதியதில் ஆஷிஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்ட அஞ்சு, மர்ம கும்பல் தனது நகைகளைப் பறித்துச் சென்றதாகப் புகாரளித்தார்.
விபத்து மற்றும் வழிப்பறி வழக்காகப் பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகள் மற்றும் உடற்கூறாய்வு முடிவுகளை ஆய்வு செய்தபோது பல முரண்பாடுகள் தென்பட்டன. ஆஷிஷின் கழுத்து நெறிக்கப்பட்டிருப்பதும், அஞ்சுவிற்குச் சிறு காயம் கூட இல்லாததும் போலீசாரின் சந்தேகத்தை வலுப்படுத்தியது.
அஞ்சுவின் செல்போன் தரவுகளை ஆய்வு செய்தபோது, அவர் தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த சஞ்சு என்பவருடன் ரகசியத் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்ததை அஞ்சு ஒப்புக்கொண்டார். திருமணமான சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாகப் பிறந்த வீட்டிற்குச் சென்ற அஞ்சு, அங்கு சஞ்சுவுடன் மீண்டும் நெருக்கமானார்.
தங்களது காதலுக்கு இடையூறாக இருந்த ஆஷிஷை தீர்த்துக்கட்டத் திட்டமிட்ட அவர்கள், ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து ஆஷிஷை கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு, விபத்து போலச் சித்தரித்துள்ளனர். வழிப்பறி நாடகத்திற்காகத் தனது நகைகளையும் காதலனிடமே அஞ்சு கொடுத்து அனுப்பியுள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம் மேகாலயாவிற்குத் தேனிலவு சென்ற ராஜா ரகுவன்ஷி என்ற இளைஞரை, அவரது மனைவி சோனம் தனது காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே பாணியில் தற்போது ராஜஸ்தானிலும் இக்கொலை நடந்துள்ளது.
இவ்வழக்கில் அஞ்சு, அவரது காதலன் சஞ்சு உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திட்டமிட்டுக் கொலை செய்தல், சாட்சியங்களை மறைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
