கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள மண்ணார்காடு பகுதியில், “பல் துலக்காமல் குழந்தையை முத்தமிட வேண்டாம்” என்று தடுத்த மனைவியை, கணவன் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவினாஷ் – தீபிகா தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில், காலையில் எழுந்ததும் குழந்தையை முத்தமிட முயன்ற அவினாஷை தீபிகா தடுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, ஆத்திரமடைந்த அவினாஷ் தனது மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார்; இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த தீபிகா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

​தகவல் அறிந்து வந்த போலீசார், ரத்தக்கறை படிந்த அரிவாளுடன் வீட்டிலேயே இருந்த அவினாஷைக் கைது செய்தனர். பெங்களூருவில் வசித்து வந்த இந்தத் தம்பதி, இரண்டு மாதங்களுக்கு முன்புதான் கேரளாவுக்குக் குடிபெயர்ந்துள்ளனர். அவினாஷ் கடந்த சில காலமாக மனநல பாதிப்புக்கு உள்ளாகி இருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ள நிலையில், போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சிறிய அறிவுரை கொலையில் முடிந்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.