கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியைச் சேர்ந்த பாதிரியார் சம்பத் என்பவர், வெளிநாட்டில் அறிமுகமான நபர் ஒருவரின் 6 மற்றும் 12 வயதுடைய இரண்டு மகன்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்தச் சிறுவர்களின் தந்தை வெளிநாட்டில் இருந்த நிலையில், அவர்களைத் தானே பராமரிப்பதாகக் கூறி அழைத்துச் சென்ற பாதிரியார், சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறுவர்களைத் தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்து சித்திரவதை செய்துள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தங்களது தாயிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, வடகரா காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். போலீசார் தேடுவதை அறிந்த பாதிரியார் சம்பத் தலைமறைவான நிலையில், அவர் பெங்களூருவில் இருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர்.
அங்கிருந்து டெல்லிக்குத் தப்பிச் செல்ல முயன்ற அவரை போலீசார் மடக்கிப் பிடித்துக் கைது செய்து கேரளாவுக்கு அழைத்து வந்தனர். கைதான பாதிரியார் இதற்கு முன்னதாக டெல்லி, பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றியுள்ளதால், அங்கேயும் இது போன்ற குற்றச் செயல்களில் அவர் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
