ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள நாதூப்பூர் பகுதியில், கட்டுமானப் பணியில் இருந்த கட்டிடத்தில் இரும்புக் கம்பிகளைத் திருடியதாகச் சந்தேகப்பட்டு, ஐந்து சிறுவர்களை ஒரு கும்பல் பிடித்து வைத்து கொடூரமாகச் சித்ரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிடிபட்ட சிறுவர்களை ஒரு விடுதி அறைக்குள் (PG) அடைத்து வைத்த அந்தக்கும்பல், அவர்களைக் கடுமையாகத் தாக்கியதோடு மட்டுமல்லாமல், சிறுவர்களின் அந்தரங்க உறுப்புகளில் பெட்ரோல் ஊற்றியும், சூடான கரண்டியால் சுட்டும் வக்கிரமாகத் தண்டித்துள்ளனர்.

காணாமல் போன தனது மகனைத் தேடிச் சென்ற ஒரு தாய், அந்த அறையில் தனது மகனும் மற்ற சிறுவர்களும் சித்ரவதை செய்யப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, கெஞ்சிக் கூத்தாடி அவர்களை மீட்டு வந்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவர்களின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், டிஎல்எஃப் பேஸ் 3 போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் தொடர்புடைய ஹரேந்திர லோகியா மற்றும் பிரோஸ் கான் ஆகிய இரண்டு முக்கிய குற்றவாளிகளைப் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

விசாரணையில், மது மற்றும் ஹுக்கா போதையில் இருந்த இந்தக் கும்பல், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களைப் பிடித்து வந்து இந்த அராஜகத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. தப்பியோடிய மற்ற குற்றவாளிகளைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரு சிறிய சந்தேகத்திற்காகச் சிறுவர்கள் மீது இத்தகைய கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.