அண்டர்-19 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டத்தில், ஒரு பந்திற்கு ஒன்பது ரன்கள் வழங்கப்பட்ட விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்திய வீரர் தீபேஷ் தேவேந்திரன் வீசிய 17-வது ஓவரின் கடைசி பந்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. லெக் சைட் திசையில் வீசப்பட்ட அந்தப் பந்தை ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் அடிக்கத் தவறினார். ஆனால், விக்கெட் கீப்பர் அபிக்யான் குண்டு அந்தப் பந்தைச் சரியாகப் பிடிக்கத் தவறியதால், பந்து பின்னால் மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த ஃபீல்டிங் அணியின் ஹெல்மெட் மீது மோதி எல்லைக்கோட்டைத் தாண்டியது.

View this post on Instagram

A post shared by ICC (@icc)

​ஐசிசி விதிமுறை 28.3.2-ன் படி, மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள ஃபீல்டிங் அணியின் ஹெல்மெட் அல்லது பிற உபகரணங்கள் மீது பந்து மோதினால், பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் அபராதமாக (Penalty runs) வழங்கப்படும். இதனுடன் பந்து எல்லைக்கோட்டைத் தாண்டியதற்கான 4 ரன்களையும் சேர்த்து, ஆப்கானிஸ்தான் அணிக்கு ஒரே பந்தில் மொத்தம் 9 ரன்கள் கிடைத்தன. சிறப்பாகப் பந்துவீசி வந்த தீபேஷ் தேவேந்திரனுக்கு இந்தச் சம்பவம் பெரும் பின்னடைவாக அமைந்ததுடன், மைதானத்தில் இருந்த வீரர்களையும் ரசிகர்களையும் ஒரு நிமிடம் திகைப்பில் ஆழ்த்தியது.