தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையே வார்த்தை போர் தீவிரமடைந்துள்ளது. அண்மையில் தவெக விழாவில் பேசிய விஜய், தற்போதைய அரசியல் சூழலில் மற்ற கட்சிகளை ‘டப்பா என்ஜின்’ என்று விமர்சித்ததோடு, 2026 தேர்தலில் திமுகவை வீழ்த்த தவெக மட்டுமே ஒரே வழி என்று கூறியிருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுத்த அண்ணாமலை, விஜய்யின் பேச்சை வெறும் கைத்தட்டலுக்கான பேச்சு என்று விமர்சித்ததுடன், “அவருடைய என்ஜினில் ஆயில் இல்லை, பெட்ரோல் இல்லை, வண்டியே இல்லை” என்று கிண்டல் செய்திருந்தார்.

அண்ணாமலையின் இந்த விமர்சனத்தால் அதிருப்தியடைந்த தவெகவினர் சமூக வலைதளங்களில் அவரை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, விஜய்க்கு ஒரு நேரடி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

“விஜய்யையோ தவெகவினரையோ நான் இன்னும் அடிக்க ஆரம்பிக்கவில்லை. நாகரீகமான அரசியல் வேண்டும் என்று விஜய் சொன்னதால் நானும் நாகரீகமாகவே பதில் அளிக்கிறேன்.

ஆனால், கட்சியில் இருக்கும் இரண்டாம் கட்டத் தலைவர்களையும், ‘அல்லு சில்லுகளையும்’ வைத்து என்னை வம்பிழுத்தால் என்னுடைய பதில் மிகக் கடுமையாக இருக்கும்” என்று அண்ணாமலை ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், விஜய்யின் உரை தமிழகத்தின் எதார்த்த நிலையை விளக்கும் வகையில் ஆழமாக இல்லை என்றும், தேர்தல் களத்தில் யார் பலமானவர்கள் என்பது மக்களுக்குத் தெரியும் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்காகத் தாங்கள் உழைத்து வருவதாகக் கூறிய அவர், தவெகவினர் தனது பேச்சை ஒரு எச்சரிக்கையாகவே எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறினார்.

விஜய்யின் வருகை தமிழக அரசியலில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அண்ணாமலையின் இந்த காட்டமான பதிலடி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.