டி20 உலகக் கோப்பைத் தொடரில் பிப்ரவரி 15-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டியைப் பாகிஸ்தான் புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், இது தொடர்பாகப் பாகிஸ்தான் ஊடகங்கள் பரப்பி வரும் தகவல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சோக் குப்தா ஆகியோர் மும்பையில் அவசர ஆலோசனை நடத்தி வருவதாகவும், பாகிஸ்தான் விளையாடாவிட்டால் ஒளிபரப்பு உரிமம் மற்றும் பொருளாதார ரீதியாகப் பெரும் இழப்பு ஏற்படும் என்பதால் அவர்கள் அச்சமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் ஊடகமான ஏஆர்ஒய் நியூஸ் செய்தி வெளியிட்டது.

மேலும், விதிகளின்படி பாகிஸ்தானுக்குக் கிடைக்க வேண்டிய வருவாயில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அந்த ஊடக விவாதத்தில் உரிமை கோரப்பட்டது. இருப்பினும், இந்தத் தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

ஜெய் ஷா மற்றும் சஞ்சோக் குப்தா ஆகியோர் தற்போது மும்பையில் இல்லை; அவர்கள் இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியப் பிரதிநிதிகளை அவர்கள் சந்தித்துப் பேசிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இதனை உறுதிப்படுத்தியுள்ளன.

உண்மையில், பாகிஸ்தான் போட்டியைப் புறக்கணித்தால் அந்த அணிக்குத் தான் சுமார் 35 மில்லியன் டாலர் வரை வருவாய் இழப்பு ஏற்படும் என்றும், ஐசிசி விதிகளை மீறியதற்காகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீது ஒளிபரப்பு நிறுவனங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் விளையாட்டுத் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.