ராஜஸ்தானின் புஷ்கர் நகரில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு எதிராகவும் போஸ்டர்களை ஒட்டிய பிரிட்டிஷ் தம்பதிக்கு இந்தியாவை விட்டு வெளியேறுமாறு காவல்துறை உத்தரவிட்டுள்ளது. லூயிஸ் கேப்ரியல் மற்றும் அனுஷி எம்மா கிரிஸ்டீன் ஆகிய இருவரும் சுற்றுலா விசாவில் இந்தியா வந்திருந்தனர்.
மேலும் கடந்த ஜனவரி 21 அன்று, புஷ்கரில் உள்ள பொது இடங்களில் “பாலஸ்தீனத்தை விடுவிப்போம், இஸ்ரேலைப் புறக்கணிப்போம்” என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை இவர்கள் ஒட்டியதாகக் கூறப்படுகிறது. புஷ்கர் பகுதி இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடம் என்பதால், இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் விசாரணையைத் தொடர்ந்து, சுற்றுலா விசாவில் வந்த வெளிநாட்டினர் இந்திய மண்ணில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது விசா விதிமுறைகளை மீறும் செயல் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தான் காவல்துறையின் சிஐடி பிரிவு, வெளிநாட்டவர் பதிவு அலுவலகம் மூலம் இந்த தம்பதிக்கு இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு வழங்கியது.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் உடனடியாகப் புறப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுற்றுலாப் பயணிகளாக வருவோர் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்பதை இந்த நிகழ்வு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
