திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற சமபந்தி விருந்தில், நரிக்குறவர் இன சிறுவர்கள் புறக்கணிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திக்கு நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் மற்றும் கோவில் நிர்வாகம் திட்டவட்டமான மறுப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் சமபந்தி விருந்து என்பது அனைவருக்கும் பொதுவானது என்றும், இதில் யாரும் புறக்கணிக்கப்படவில்லை என்றும் மேயர் விளக்கம் அளித்துள்ளார். சுமார் 900 பயனாளிகள் இந்த விருந்தில் கலந்துகொண்டு உணவு அருந்தியதாகவும், தானே நேரில் சென்று உணவின் தரம் மற்றும் விநியோகத்தை ஆய்வு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து மேயர் மேலும் கூறுகையில், திட்டமிட்டு தவறான வதந்திகள் பரப்பப்படுவதாக குற்றம் சாட்டினார். சமபந்தியில் பங்கேற்ற நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது வீட்டிற்கும் சேர்த்து உணவு கேட்டதாகவும், அங்கு அமர்ந்து உண்ண வந்தவர்களுக்கு உரிய முறையில் உணவு பரிமாறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனிநபர் ஆதாயத்திற்காக யாரோ சிலர் முகநூலில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பகிர்ந்து வருவதாகவும், இத்தகைய தேவையற்ற சர்ச்சைகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் கோவில் நிர்வாகம் மற்றும் மேயர் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.