மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம், மனிதநேயம் இன்னும் சாகவில்லை என்பதை உலகுக்கு உரக்கச் சொல்லியிருக்கிறது. மதலவாடா பஞ்சாயத்துக்குட்பட்ட ரன்பூர் கிராம அங்கன்வாடி மையத்தில், குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென ஆயிரக்கணக்கான தேனீக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தாக்கியுள்ளன. இதைப் பார்த்த அங்கன்வாடி சமையலர் காஞ்சன் பாய் மேக்வால், தனது உயிரைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் அங்கிருந்த தார்ப்பாய்கள் மற்றும் பாய்களை எடுத்து ஒவ்வொரு குழந்தையாகப் போர்த்திப் பாதுகாப்பாக உள்ளே அனுப்பியுள்ளார். குழந்தைகளைக் காக்கத் தான் ஒரு கேடயமாக நின்ற அந்தத் தாயை, தேனீக்கள் மொத்தமாகச் சூழ்ந்து கொடூரமாகக் கொட்டின.

​நூற்றுக்கணக்கான தேனீக்கள் கடித்த நிலையிலும், கடைசி குழந்தை பாதுகாப்பாக உள்ளே செல்லும் வரை அவர் பின்வாங்கவில்லை. இறுதியில் மயங்கி விழுந்த காஞ்சன் பாயை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தனது குடும்பத்திற்கு ஒரே ஆதாரமாக இருந்த காஞ்சன் பாய்க்கு, முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட கணவர் மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். தன் உயிரைக் கொடுத்து 20 குழந்தைகளின் உயிரைக் காத்த இந்த “நிஜமான தேவதை”யின் உடலைப் பார்த்த கிராம மக்கள் கண்ணீர் மல்க அவருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.