மத்திய பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு சரிவைச் சந்தித்த இந்தியப் பங்குச்சந்தை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி இடையிலான வர்த்தக ஒப்பந்த அறிவிப்பால் இன்று அதிரடி எழுச்சி கண்டுள்ளது. சென்செக்ஸ் ஒரே நாளில் 4000 புள்ளிகள் வரை உயர்ந்து முதலீட்டாளர்களைக் குஷிப்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், பங்குப் பரிவர்த்தனை வரி (STT) சற்றே உயர்த்தப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள் பங்குகளைத் தீவிரமாக விற்பனை செய்ததால், சென்செக்ஸ் 1500 புள்ளிகளும், நிஃப்டி 500 புள்ளிகளும் சரிந்தது.

இந்நிலையில், பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையே நேற்று தொலைபேசி வாயிலாக முக்கியப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதுகுறித்து டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “பிரதமர் மோடியுடனான நட்பின் அடிப்படையிலும், அவரது வேண்டுகோளுக்கு இணங்கவும் இந்தியா – அமெரிக்கா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. இதற்குப் பதிலாக, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு, அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்கப் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டுள்ளார் என்றார்.

டிரம்பின் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே இந்தியப் பங்குச்சந்தை ராக்கெட் வேகத்தில் உயரத் தொடங்கியது. சர்வதேச வர்த்தக உறவில் ஏற்பட்டுள்ள இந்தச் சாதகமான சூழலால் முதலீட்டாளர்கள் உற்சாகமடைந்தனர். அதன்படி இன்று காலை சென்செக்ஸ்: 4,000 புள்ளிகள் உயர்ந்து 84,000 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. நிஃப்டி: 1,200 புள்ளிகள் உயர்ந்து 25,750 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

மேலும் வரி குறைப்பு மற்றும் புதிய வர்த்தக ஒப்பந்தம் காரணமாக ஐடி, வங்கி மற்றும் ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் பெரும் லாபத்தைச் சந்தித்து வருகின்றன. பட்ஜெட்டால் ஏற்பட்ட சரிவை இந்த ஒரே ஒரு தொலைபேசி உரையாடல் சரி செய்துள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.