பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை சுட்டுக்கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவரை போலீஸார் கைது செய்தனர். ரகுநந்தன்பூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தன் குமார் சவுத்ரி என்பவர் தனது மனைவி சுமன் குமாரி மற்றும் மகளுடன் உறவினர் வீட்டு விசேஷத்திற்குச் சென்றார்.

அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத வயல்வெளிப் பகுதிக்கு மனைவியை அழைத்துச் சென்ற சந்தன் குமார் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரைச் சுட்டுக் கொன்றார். பின்னர் அக்கம் பக்கத்தினர் மீது பழிபோட்டுவிட்டு போலீஸாரிடம் தானாகவே தகவல் தெரிவித்து சம்பவ இடத்தில் கதறி அழுது நாடகமாடியுள்ளார்.

போலீஸாரின் தீவிர விசாரணையில் சுமன் குமாரிக்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் இருந்ததும் அதனால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதும் தெரியவந்தது. பலமுறை எச்சரித்தும் சுமன் குமாரி தனது போக்கை மாற்றிக்கொள்ளாததால் ஆத்திரமடைந்த சந்தன் குமார் திட்டமிட்டு இந்த கொலையைச் செய்ததை ஒப்புக்கொண்டார்.

கொலையாளியிடமிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்களைக் கைப்பற்றிய போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஒரு குழந்தையின் கண் முன்னாலேயே தாயைக் கொன்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.