கூகுள் ஜெமினி போன்ற செயற்கை நுண்ணறிவுச் செயலிகள் நமது அன்றாடப் பணிகளை எளிதாக்கினாலும், அவற்றில் ஒளிந்துள்ள தனியுரிமை அபாயங்கள் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாம் கூகுள் கணக்கிலிருந்து வெளியேறினாலும், ஜெமினி தொடர்ந்து பயனர்களின் ஐபி முகவரி, இருப்பிடம் மற்றும் உரையாடல்களைச் சேகரிக்கிறது.
இதில் மிகவும் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், கூகுள் தனது தொழில்நுட்பத்தை மேம்படுத்த ‘மனித மதிப்பாய்வாளர்களை’ பயன்படுத்துகிறது அதாவது, நீங்கள் ஜெமினியில் பகிரும் ரகசியத் தகவல்களை எங்கோ ஒரு மனிதர் படித்துப் பார்க்கும் வாய்ப்பு உள்ளது.
இந்தத் தரவுப் பாதுகாப்பற்ற சூழலில் இருந்து தப்பிக்க, பயனர்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கூகுள் நிறுவனமே தனது பயனர்களைத் தனிப்பட்ட அல்லது ரகசியத் தகவல்களை ஜெமினியில் உள்ளீடு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
மேலும் உங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய, ஜெமினி செட்டிங்ஸில் உள்ள பகுதிக்குச் சென்று பழைய உரையாடல்களை நீக்கலாம் அல்லது குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவை தானாகவே அழியும்படி வசதியைச் செயல்படுத்தலாம். தொழில்நுட்பம் வரப்பிரசாதமாக இருந்தாலும், நமது அந்தரங்க விஷயங்களைப் பகிரும்போது கூடுதல் கவனத்துடன் இருப்பதே சிறந்தது.
