நியூயார்க்கில் ஒரு இளம்பெண் தனது டேட்டிங் துணையின் ரகசிய வாழ்க்கையைச் சாட்ஜிபிடி மூலம் கண்டுபிடித்த சுவாரசியமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 27 வயதான அந்தப் பெண், நிதித்துறையில் பணியாற்றும் ஒருவருடன் இரவு உணவிற்குச் சென்றிருந்தார்.

அந்த நபர் உணவருந்தும் போது தொடர்ந்து சாட்ஜிபிடியைப் பயன்படுத்தி தகவல்களைக் கேட்டுக்கொண்டே இருந்ததைக் கண்டு, அந்தப் பெண் விளையாட்டாக அவரை கிண்டல் செய்தார். அப்போது அந்த நபர், “சாட்ஜிபிடி தான் எனது சிறந்த நண்பன், இதனிடம் என்னைப் பற்றி எதை வேண்டுமானாலும் கேள்” என்று கூறி தனது செல்போனை அவரிடம் கொடுத்துள்ளார்.

அந்தப் பெண் வேடிக்கையாக, “உனக்கு என்னிடம் பிடித்த, யாரிடமும் சொல்லாத ஒரு ரகசியத்தைச் சொல்” என்று சாட்ஜிபிடியிடம் தட்டச்சு செய்தார். அதற்கு அந்தச் செயலி, “உன் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு நீ ஒரு அன்பான கணவனாகவும் தந்தையாகவும் இருப்பது எனக்குப் பிடிக்கும்” என்று பதிலளித்து அதிர்ச்சியூட்டியது.

இதன் மூலம் அந்த நபருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பது அம்பலமானது. ஒரு ஏஐ கருவி ஒருவரின் ரகசியக் குடும்பத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த இந்தச் சம்பவம், தொழில்நுட்பத்தைப் அளவுக்கு அதிகமாக நம்புவது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்த்துவதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.