தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் கட்சிகளிடையே கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன. தற்போதுள்ள சூழலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு முக்கியக் கூட்டணிகள் ஒருபுறம் இருக்க, சீமானின் நாம் தமிழர் கட்சி வழக்கம் போல் தனித்துப் போட்டியிடுகிறது.
இதற்கிடையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் யாரிடம் கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைவது குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
திமுக கூட்டணியில் விரிசல் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் ஒரு முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார். தவெக-வுடன் கூட்டணி அமைக்கக் காங்கிரஸ் விரும்புவதாகவும், அதற்குத் தலைவர் விஜய் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தென்னிந்தியாவில் தனது பிடியை வலுப்படுத்த வேண்டும் என நினைக்கும் காங்கிரஸிற்கு, விஜய் ஒரு பலமான முகமாக இருப்பார் என்றும், இந்தக் கூட்டணி அமைந்தால் இரு தரப்பிற்கும் அது பெரும் வெற்றியைத் தரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாஞ்சில் சம்பத்தின் இந்தப் பேட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திமுக-காங்கிரஸ் இடையே சில கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகத் தகவல்கள் வந்த நிலையில், தற்போது விஜய் – காங்கிரஸ் கூட்டணி குறித்த பேச்சுக்கள் எழுந்துள்ளது முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.
இருப்பினும், இந்தக் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் எப்போது வெளியிடுவார் என்பதை அறியத் தொண்டர்களும் அரசியல் நோக்கர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
