தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கண்டித்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி ‘கொடுங்கோல் ஆட்சி’ என்றும், அவர் ஹிட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரிகளின் மொத்த உருவமாகத் திகழ்வதாகவும் எடப்பாடி சாடியுள்ளார்.

கடந்த 56 மாத திமுக ஆட்சியில் காவல்துறை முடங்கிப்போயுள்ளதால், 6 வயது சிறுமி முதல் முதியவர்கள் வரை வீதியில் பாதுகாப்பாக நடக்க முடியாத சூழல் நிலவுவதாக அவர் தனது அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார்.

குறிப்பாக, சென்னை தரமணியில் வெளிமாநில இளம்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்ட விவகாரம் மற்றும் நந்தனம் அரசு கல்லூரியில் திமுக பிரமுகரால் ஒரு பெண் சீரழிக்கப்பட்ட சம்பவம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் போதைப்பொருட்கள் தடையின்றி கிடைப்பதும், அதில் ஆளுங்கட்சியினருக்குத் தொடர்பு இருப்பதும் தான் இத்தகைய குற்றங்கள் அதிகரிக்கக் காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதிலும், ‘கமிஷன், கலெக்ஷன்’ என்பதிலுமே இந்த அரசு குறியாக இருப்பதாக அவர் சாடியுள்ளார்.

நிர்வாகத் திறனற்ற இந்த ஆட்சியால் தமிழகம் கடன் சுமையில் தத்தளிப்பதாகவும், மக்களின் கண்ணீரே இந்த ஆட்சியை வீழ்த்தும் படை என்றும் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.

“ஏய்ப்பவர்க்கே காலம் என்று எண்ணிவிடாதே” என்ற எம்.ஜி.ஆரின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி, வரவிருக்கும் தேர்தலில் மக்கள் நிச்சயம் ஒரு மாறுதலைத் தருவார்கள் என்றும், அதன் மூலம் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் என்றும் அவர் தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.