தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிப்ரவரி 4-ஆம் தேதி அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் பணி சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக ஏற்கனவே வேட்பாளர் நேர்காணலை முடித்துவிட்டு, தொகுதி வாரியான சுற்றுப்பயணங்களையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகுதிகள் மற்றும் அதிமுக போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பாஜக, பாமக, அமமுக ஆகிய கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஓ.பன்னீர்செல்வத்தைத் தவிர மற்ற தரப்பினரை உள்ளடக்கி ஒரு பலமான கூட்டணியை எடப்பாடி பழனிசாமி ஒருங்கிணைத்துள்ளார்.
தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ளதால், அடுத்தகட்டமாகப் பெரிய அளவில் பொதுக்கூட்டங்களை நடத்துவது மற்றும் தேர்தல் அறிக்கையை மக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்த திட்டங்களும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன.
‘தமிழகத்தைக் காப்போம், மக்களை மீட்போம்’ என்ற பெயரில் ஏற்கனவே பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள இபிஎஸ், மாவட்டச் செயலாளர்களுக்குத் தொகுதி வாரியாகப் புதிய இலக்குகளையும், தேர்தல் பணிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்களையும் வழங்க உள்ளார்.
