எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுச்சியுரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 210 இடங்களில் அமோக வெற்றி பெற்று, அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனத் தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்.

திமுக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், உதயநிதி எதிர்பார்த்தபடி காங்கிரஸ் அவர்களுக்குக் கைகொடுக்காமல் நழுவிவிட்டதாகவும் அவர் விமர்சித்தார்.

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று சொன்னவர்களின் கணிப்புகளைப் பொய்யாக்கி, ஒரு சிறந்த ஆட்சியைத் தந்து காட்டியதாக எடப்பாடி பழனிசாமி பெருமிதம் கொண்டார்.

திமுக ஆட்சி முடிய இன்னும் இரண்டு அமாவாசைகள் மட்டுமே உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், திமுக அரசுக்குத் தற்போது கடும் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். தற்போது அதிமுக அமைத்துள்ள பலமான கூட்டணி, வரும் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.