சென்னை தரமணியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கௌரவ் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக அரசு எச்சரித்துள்ளது.

இது தொடர்பாகத் தமிழக தகவல் சரிபார்ப்பகம் (TFC) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “சென்னையில் நடந்த இக்கோரக் கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், மொழி அல்லது மாநில வெறுப்புணர்வே இந்தக் கொலைக்குக் காரணம் என்றும் சமூக வலைதளங்களில் ஒரு சிலரால் திட்டமிட்டுப் பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இது மாநிலத்தின் அமைதியைக் குலைக்கும் செயலாகும்.

போலீஸாரின் தீவிர விசாரணையில், கௌரவ் குமார் மற்றும் அவரது குடும்பத்தினரைக் கொலை செய்தது தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கொலையில் தொடர்புடையதாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்களான சிக்கந்தர், நரேந்திர குமார், ரவீந்திரநாத் தாக்கூர் மற்றும் விகாஸ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்குள் இருந்த தனிப்பட்ட முன்விரோதமே இந்தக் கொலைக்குக் காரணமாக இருந்துள்ளது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் முழு பாதுகாப்புடன் வசித்து வருகின்றனர். தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலான மோதலை, மாநிலத்தின் பாதுகாப்போடு தொடர்புபடுத்திப் பேசுவது முற்றிலும் தவறானது.

சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் வெறுப்புணர்வைத் தூண்டும் பதிவுகளைப் பகிர்பவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். பொதுமக்கள் எந்தவொரு செய்தியையும் அதன் உண்மைத் தன்மையை ஆராயாமல் பகிர வேண்டாம்” என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது