வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் திமுக-விற்குமே நேரடிப் போட்டி நிலவுவதாக அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: “தமிழக அரசியலில் தற்போதைய களநிலவரப்படி ‘தவெக vs திமுக’ என்ற இறுதிப் போட்டிக்கு நாங்கள் வந்துவிட்டோம். எனவே, தவெக தொண்டர்கள் அனைவரும் திமுக-வின் செயல்பாடுகளை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதிமுக-வை விமர்சித்து நமது பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம். அதிமுக மீது மக்களுக்கு ஏற்கனவே நம்பிக்கை போய்விட்டது; அவர்கள் எந்தக் கூட்டணியை உருவாக்கினால் நமக்கென்ன?” என்று கேள்வி எழுப்பினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) உடனான உறவு குறித்துப் பேசிய அவர், “தவெக-விற்கும் விசிக-விற்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை. வேங்கைவயல் விவகாரம், வடகாடு சர்ச்சை மற்றும் மதுரையில் கொடிக்கம்பம் ஏற்றிய நிகழ்வு ஆகியவற்றில் விசிக தலைவர் திருமாவளவனுக்கு இந்த திமுக ஆட்சியில் என்ன மரியாதை கிடைத்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

திருமாவின் மனசாட்சி எனக்குத் தெரியும், எனது எண்ணம் அவருக்குத் தெரியும். எங்களுக்குள் ஒருபோதும் பிளவு ஏற்படாது” என்று உறுதியுடன் தெரிவித்தார்.

தொடர்ந்து திமுக-வின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த அவர், “தவெக-வை பாஜக-வின் ‘பி’ டீம் என்று திமுக-வினர் கூறி வருகின்றனர்.

ஆனால், உண்மையில் பாஜக-வின் ‘பி’ டீமாகச் செயல்படுவது திமுக-தான்” என்று குற்றம் சாட்டினார். மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் இந்தத் திட்டவட்டமான அரசியல் நிலைப்பாடு கூட்டணி அரசியலில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.