தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட மற்றும் மாநில அளவிலான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, வரும் 2026 தேர்தல் களம் ‘தவெக vs திமுக’ என்ற நிலைக்கு வந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
“திமுக-வை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படுங்கள்; அதிமுக-வை விமர்சித்துப் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம்” என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்திய அவர், அதிமுக மீது மக்களுக்கு இனி நம்பிக்கை இல்லை என்றும் சாடினார். விசிக உடனான உறவு குறித்துப் பேசிய அவர், “திருமாவளவன் அண்ணனுக்கும் எனக்கும் இடையே எந்தப் பிரச்சனையும் இல்லை; எங்களுக்குள் ஒருபோதும் பிளவு ஏற்படாது” என்று கூறி, விசிக தொண்டர்களிடையே நிலவிய குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
மேலும், வேங்கைவயல் முதல் மதுரைக் கொடிக்கம்பச் சர்ச்சை வரை இந்த ஆட்சியில் திருமாவளவனுக்குச் சரியான மரியாதை அளிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், தவெக-வை ‘பி டீம்’ என்று விமர்சிக்கும் திமுக-தான் உண்மையில் பாஜக-வின் ‘பி டீம்’ என்று காரசாரமாகப் பதிலடி கொடுத்தார்.
