கேரளாவில் தனியார் பேருந்து பயணத்தின்போது இளைஞர் ஒருவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக மலையாள நடிகையும் சமூக வலைதள பிரபலமுமான ஸ்ரீதேவி கோபிநாத் வெளியிட்டுள்ள உருக்கமான காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்தக் காணொலியில், தான் 5 மாதக் கர்ப்பிணியாக இருந்த காலத்திலேயே தனது கணவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகத் தனது வேதனையான கடந்த காலத்தைப் பகிர்ந்துள்ளார். பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகள் ஒருவருடைய வாழ்க்கையை எந்த அளவிற்குப் பாதிக்கும் என்பதைத் தனது சொந்த அனுபவத்தின் மூலம் அவர் விளக்கியுள்ளார்.

பேருந்து விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தைக் குறிப்பிட்ட அவர், அனைத்து ஆண்களும் தவறானவர்கள் கிடையாது என்பதைப் போல, அனைத்துப் பெண்களும் கெட்டவர்கள் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒரு தனிப்பட்ட நிகழ்வை வைத்து ஒட்டுமொத்தப் பெண்களையும் சமூக வலைதளங்களில் இழிவுபடுத்த வேண்டாம் என்றும், பாலியல் ரீதியான விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டியது சமூகத்தின் கடமை என்றும் அவர் அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.