மகாராஷ்டிர மாநிலம் பாராமதியில் நடைபெற்ற கோர விமான விபத்தில், அம்மாநில துணை முதல்வர் அஜித் பவாருடன் பயணித்து உயிரிழந்த கேப்டன் சாம்பவி விபத்திற்கு சில மணி நேரத்திற்கு முன்பு தனது பாட்டிக்கு அனுப்பிய குறுஞ்செய்தி தற்போது கண்ணீரை வரவழைத்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்தவர் கேப்டன் சாம்பவி. இவர் தனது பாட்டி மீரா பாடக்கிடம் மிகுந்த பாசம் கொண்டவர். பாட்டியை ‘தத்தா’ என்றே செல்லமாக அழைத்து வந்துள்ளார்.

நேற்று (ஜனவரி 28, 2026) காலை 6:30 மணியளவில், சாம்பவி தனது பாட்டிக்கு “Hi Dadda Good Morning…” என வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதற்கு அவரது பாட்டியும் “Good Morning Cgeeni” எனப் பதிலளித்துள்ளார். இதுவே அவர்களின் கடைசி உரையாடலாக அமையும் என்று அந்த குடும்பம் கனவிலும் நினைக்கவில்லை.

காலை 8:45 மணியளவில் பாராமதி விமான நிலையத்திற்கு அருகே விமானம் தரை இறங்க முயன்றபோது விபத்தில் சிக்கியது. இதில் சாம்பவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாம்பவியின் தந்தை விக்ரம் பாடக், இந்திய விமானப்படையில் மிராஜ் போர் விமானங்களின் ‘ஸ்க்வாட்ரன் லீடர்’ ஆகப் பணியாற்றியவர். தற்போது டெல்லியில் வசித்து வருகிறார். சிறுவயதிலிருந்தே தனது தந்தை போர் விமானங்களை இயக்குவதைப் பார்த்து வளர்ந்த சாம்பவிக்கு, தானும் வானில் பறக்க வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது.

2006-ஆம் ஆண்டு குவாலியர் விமானப்படை வித்யா பாரதி பள்ளியில் தனது கல்வியைத் தொடங்கிய சாம்பவி, பின்னர் தனது தந்தை குவாலியர் விமானப்படை தளத்திற்கு ‘குரூப் கேப்டனாக’ மாற்றப்பட்டபோது 2016-இல் மீண்டும் அங்கேயே தனது பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தார். பள்ளிப்படிப்பை முடித்தவுடன், தனது லட்சியத்தை அடைய மும்பைக்குச் சென்று கடினமாக உழைத்து ஒரு ‘புரொபஷனல் பைலட்’ ஆக உருவெடுத்தார்.

காலை 6:30 மணிக்கு குறுஞ்செய்தி அனுப்பிய பேத்தி, 9 மணிக்குள் பிணமாகிவிட்டாள் என்ற செய்தியை சாம்பவியின் பாட்டி மீரா பாடக்கால் இன்னும் நம்ப முடியவில்லை. “அவள் என் இதயத்திற்கு மிக நெருக்கமானவள். வேலையில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் எனக்கு மெசேஜ் அனுப்பத் தவறமாட்டாள்” என்று கண்ணீர் மல்கக் கூறினார்.

பாராமதி விமான விபத்தில் துணை முதல்வர் அஜித் பவாருடன் சேர்ந்து இளம் பெண் கேப்டன் சாம்பவியும் பலியான சம்பவம், குவாலியர் மற்றும் மகாராஷ்டிர மாநில மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.