சென்னை அடையாறு இந்திரா நகரில் சாலையோரமாகக் கிடந்த ஒரு ரத்தம் தோய்ந்த சாக்குமூட்டை பொதுமக்களை உறைய வைத்தது. தகவலறிந்து வந்த போலீசார் மூட்டையைத் திறந்து பார்த்தபோது, சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, பைக்கில் வந்த இருவர் அந்த மூட்டையை வீசிச் சென்றது உறுதியானது.
தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில், சிக்கந்தர் (30) உள்ளிட்ட 7 பேர் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டது பீகாரைச் சேர்ந்த கௌரவ் குமார் (30) என்பது தெரியவந்தது. ஆனால், அதையும் தாண்டி அவர்கள் சொன்ன வாக்குமூலம் போலீசாரையே அதிர வைத்தது.
கௌரவ் குமாரை மட்டும் கொல்லாமல், அவரது மனைவி முனிதா குமாரி மற்றும் குழந்தையையும் சேர்த்து இந்தக் கும்பல் கருவறுத்துள்ளது.
மனைவியின் சடலத்தையும், குழந்தையின் சடலத்தையும் பெருங்குடி குப்பைக் கிடங்கில் வீசிவிட்டதாகக் கொலையாளிகள் தெரிவித்துள்ளனர். தற்போது அங்குச் சடலங்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
