சென்னை அடையாறு இந்திரா நகர் பகுதியில் கடந்த ஜனவரி 26-ஆம் தேதி ரத்தக் கறையுடன் கிடந்த ஒரு சாக்கு மூட்டையை போலீஸார் கைப்பற்றினர். அதனைப் பிரித்துப் பார்த்தபோது, உள்ளே தலை மற்றும் முகத்தில் பலத்த வெட்டுக் காயங்களுடன் ஒரு இளைஞரின் சடலம் இருந்தது. போலீஸாரின் தீவிர விசாரணையில், உயிரிழந்தவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கௌரவ் குமார் என்பதும், அவர் தரமணியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளியாகப் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
இந்த நிலையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், மோட்டார் சைக்கிளில் சடலத்தை வீசிச் சென்ற நபர்களைக் கண்டறிந்த தனிப்படை போலீஸார், கௌரவ் குமாரின் நண்பர்கள் உட்பட ஐந்து பேரைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் வெளியாகி உள்ள தகவல்கள் ஒட்டுமொத்த சென்னை நகரையுமே அதிரச் செய்துள்ளன.
இதனால் கௌரவ் குமாரை மட்டும் கொல்லாமல், அவரது மனைவி முனிதா குமாரி மற்றும் அவர்களது இரண்டு வயதுக் குழந்தையையும் அந்தக் கும்பல் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. கைதானவர்களின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, கூவம் ஆற்றுப் பகுதியில் வீசப்பட்டிருந்த குழந்தையின் சடலத்தை போலீஸார் மீட்டுள்ளனர்.
மேலும் மாயமான மனைவியின் சடலத்தைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வேலை தேடி சென்னை வந்த ஒரு வடமாநிலக் குடும்பம், நண்பர்களாலேயே இவ்வளவு கொடூரமாகக் கொல்லப்பட்டதற்கான காரணம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
