மதுராந்தகத்தில் கடந்த ஜனவரி 23 அன்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தின் வளர்ச்சிக்கு ‘இரட்டை என்ஜின்’ (Double Engine) ஆட்சி அமையப்போவது உறுதி என்று அறிவித்திருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “மத்திய பாஜக அரசு ஏற்படுத்திய முட்டுக்கட்டைகளைத் தகர்த்துதான் தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளது; பிரதமர் சொல்லும் இரட்டை என்ஜின் என்பது தமிழ்நாட்டில் ஓடாத ஒரு டப்பா என்ஜின்” என்று சாடினார். முதலமைச்சரின் இந்த வாசகங்கள் தற்போது அரசியல் களத்தில் வைரலாகி வரும் நிலையில், ஈரோடு மாநகரின் முக்கியப் பகுதிகளான பேருந்து நிலையம் மற்றும் ஈ.வி.கே. சம்பத் சாலை உள்ளிட்ட இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராகப் பரபரப்புச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில், “டபுள் என்ஜின் டப்பா என்ஜின் தமிழ்நாட்டில் ஓடாது, அடிமைகளை விரட்டுவோம் தமிழ்நாட்டை காப்போம்” என்ற வாசகங்களுடன், பழைய ரயில் என்ஜின் ஒன்றில் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி. தினகரன் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கணக்குகள் சூடுபிடித்துள்ள நிலையில், ஈரோட்டில் ஒட்டப்பட்டுள்ள இந்தச் சுவரொட்டிகள் அரசியல் கட்சிகளிடையே கடும் மோதலை உருவாக்கியுள்ளன.
