கட்சி ஆரம்பித்த உடனே முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும் என்று சிலருக்கு ஆசை வந்துவிடுகிறது என விஜய் பெயரைச் சொல்லாமல் அமைச்சர் எ.வ.வேலு செம காட்டமாக விமர்சித்துள்ளார். “மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் துளிகூட இல்லை, வெறும் பதவி ஆசைதான் இவர்களை இயக்குகிறது” என்று சாடிய அவர், தமிழக மக்கள் ஒன்றும் இளிச்சவாயர்கள் அல்ல என்றும் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் முதல் ஊராட்சித் தேர்தல் வரை யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பதில் தமிழர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள் என அவர் கூறியிருப்பது, விஜய்யின் அரசியல் வருகையைத் திமுக எந்த அளவுக்கு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது என்பதைக் காட்டுகிறது.

​திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்தும் விஜய்க்கு, ஆளுங்கட்சி தரப்பிலிருந்து வரும் இந்த விமர்சனம் ஒரு பெரிய ‘பொலிட்டிக்கல் அட்டாக்’ என்றே சொல்லலாம். “நாங்கள் மக்களுடன் எப்போதும் இருப்பவர்கள், திடீரென வருபவர்கள் எங்களை ஒன்றும் செய்ய முடியாது” என்கிற தொனியில் எ.வ.வேலு பேசியிருப்பது, வரவிருக்கும் 2026 தேர்தல் களம் அனல் பறக்கப் போவதை உறுதி செய்கிறது. விஜய்யின் கொள்கை அறிவிப்புகளுக்குப் பிறகு, திமுகவின் அடுத்தடுத்த மூத்த அமைச்சர்களும் இப்படித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருப்பது தவெக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.