விருதுநகரில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ், தமிழக அரசியல் சூழல் மற்றும் பாஜக-அதிமுக கூட்டணி குறித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பாஜகவுடன் கூட்டணி வைப்பது அதிமுகவைப் பலவீனப்படுத்தும் என்று எச்சரித்தார். மேலும், தாமரை மலரைச் சாடிப் பேசிய அவர், “உடலுக்குப் படர்தாமரை கெடுதல், குளத்திற்கு ஆகாயத்தாமரை கெடுதல், அதுபோல பாஜக-வின் தாமரை இந்த நாட்டுக்கே கெடுதல்” என்று மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
தமிழகத்தில் பாஜக காலூன்றுவது குறித்து நக்கலாகப் பேசிய கருணாஸ், வருங்காலத்தில் ஒரு காளை மாடு கூடக் கன்று ஈனலாம், ஆனால் தமிழக மண்ணில் பாஜக ஒருபோதும் வளர்ச்சியடைய முடியாது என்று தெரிவித்தார். திராவிட மண்ணில் பாஜகவின் அரசியல் எடுபடாது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அதிமுக போன்ற பெரிய கட்சிகள் பாஜகவுடன் இணைவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கருணாஸின் இந்தச் சுவாரசியமான மற்றும் காரசாரமான பேச்சுகள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
