புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ முடிவை பிப்ரவரி முதல் வாரத்தில் அறிவிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார். “வெறும் எம்.எல்.ஏ ஆக வெற்றி பெறுவது மட்டும் எங்கள் நோக்கமல்ல; ஆட்சி அதிகாரத்தில் எங்களுக்கும் பங்கு வேண்டும் என்பதே பிரதான கோரிக்கை” என அவர் அதிரடியாகக் கூறியுள்ளார். ஏற்கனவே விஜய் “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு” எனப் பேசியுள்ள நிலையில், கிருஷ்ணசாமியின் இந்த நிலைப்பாடு அவர் தவெக பக்கம் செல்லக்கூடும் என்ற எதிர்பார்ப்பை அரசியல் வட்டாரத்தில் பலப்படுத்தியுள்ளது.

​முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு எதிராகத் தனது கருத்துகளைத் தீவிரமாகப் பதிவு செய்து வரும் கிருஷ்ணசாமி, தற்போது தவெக-வின் கொள்கையோடு ஒத்துப்போவது போலப் பேசுவது, தமிழக அரசியலில் ஒரு புதிய கூட்டணியின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. பிப்ரவரி முதல் வாரத்தில் அவர் எடுக்கப்போகும் முடிவு, வரும் தேர்தலில் ஒரு முக்கியத் திருப்பமாக அமையலாம்.