சிவகாசிக்கு வருகை தந்த முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிறுவனத் தலைவர் கருணாஸ், செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழக அரசியல் சூழல் குறித்துப் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் அவரது ரசிகர்கள் மக்களை மிரட்டி வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், விஜய் போன்றவர்கள் பாஜக-வின் திட்டங்களுக்குத் துணை போய்விடுவார்களோ என்ற அச்சம் தனக்கு இருப்பதாகத் தெரிவித்தார்.
“தமிழகத்தில் பாஜக கால்ஊன்றி விடக்கூடாது என்பதற்காகவே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்தேன்; வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வேன்” என்று அவர் உறுதிபடக் கூறினார்.
மேலும், சாத்தூர் தொகுதியில் தான் போட்டியிட வேண்டும் என்று தனது கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ள போதிலும், அது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என்றும், திமுக தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் கருணாஸ் நம்பிக்கை தெரிவித்தார்.
