அதிமுக கொண்டு வந்த விலையில்லா லேப்டாப் திட்டத்தை விஜய் தனது ‘சர்க்கார்’ திரைப்படத்தில் அவமதித்ததைச் சுட்டிக்காட்டி, அக்கட்சியின் எம்.எல்.ஏ வி.வி.ராஜன் செல்லப்பா விஜய்க்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் அதிமுகவை ஊழல் கட்சி என்று விஜய் விமர்சித்திருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய ராஜன் செல்லப்பா, “அண்ணா திமுகவை தொட்டுவிட்டதால் இனி நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்” என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

புதிதாக கட்சித் தொடங்கியுள்ள விஜய், மக்களுக்கான கொள்கைகளையும் திட்டங்களையும் முன்வைக்காமல் மற்றவர்களை விமர்சிப்பதிலேயே குறியாக இருப்பதாக அவர் சாடியுள்ளார்.

சர்க்கார் திரைப்படம் வெளியானபோது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திட்டத்தை இழிவுபடுத்திய காட்சிகளுக்காக மதுரையில் அந்தப் படத்தை ஓடவிடாமல் தடுத்ததை விஜய் மறந்துவிடக் கூடாது என்று அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் நேரடியாகக் குறிப்பிட்டுள்ளார்.

அரசு வழங்கும் நலத்திட்டங்களை ‘மக்களைச் சோம்பேறிகளாக்கும் செயல்’ எனத் திரைப்படங்களில் காட்டியவர் விஜய் என்று விமர்சித்துள்ள அவர், பழைய சம்பவங்களை நினைவூட்டி தற்போது விஜய்யை டேக் செய்து எச்சரிக்கை விடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.