உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தப்பட்ட மைனர் சிறுமி ஒருவரை இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக அன்ஷு கௌதம் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ஆஷிக், வைபவ், ரிஷப் ஆகிய நான்கு பேரை லக்னோ போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தனது மகளைத் திருமணம் செய்வதாக நம்ப வைத்து அன்ஷு கௌதம் அழைத்துச் சென்றதாகவும், அவர் வீடு திரும்பாததால் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தியபோது ரயில் தண்டவாளத்தில் இருந்து சிறுமியின் உடல் மீட்கப்பட்டதாகவும் அவரது தாய் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

போலீஸ் ஆய்வாளர் சுரேஷ் சிங் தலைமையிலான தனிப்படையினர் நடத்திய விசாரணையில், இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் ஏற்பட்ட தகராறில் சிறுமியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, தற்கொலை போலச் சித்தரிக்க உடலை ரயில் தண்டவாளத்தில் வீசிச் சென்றதை அன்ஷு கௌதம் ஒப்புக்கொண்டார்.

இந்த வழக்கில் கைதான நால்வர் மீதும் போக்சோ சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அனைத்து ஆதாரங்களையும் திரட்டி வலுவான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யப் போவதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.