தோல் நோயால் ஏற்பட்ட வழுக்கை காரணமாக சீனப் பெண் ஒருவர் விவாகரத்து செய்யப்பட்ட சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரைச் சேர்ந்த 34 வயதான அந்தப் பெண், திருமணத்திற்குப் பிறகு அலோபீசியா எனப்படும் தீவிர முடி உதிர்வு நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரது தலையில் இருந்த முடிகள் அனைத்தும் கொட்டி வழுக்கை ஏற்பட்டது. இதனை ஏற்க மறுத்த அவரது கணவர், தனது மனைவியின் தோற்றம் மாறிவிட்டதாகக் கூறி விவாகரத்து கோரினார்.
மேலும் இறுதியில் நீதிமன்றம் மூலம் அவர்களுக்கு விவாகரத்து வழங்கப்பட்டது, இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விவகாரம் இணையத்தில் தீயாய் பரவிய நிலையில், பலரும் கணவரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒருவரது உடல்நலக் குறைவின் போது துணையாக இருக்க வேண்டிய கணவரே, தோற்றத்தை காரணம் காட்டி கைவிடுவது சுயநலமானது என்று சமூக ஆர்வலர்கள் சாடுகின்றனர்.
அதேசமயம், சிலரோ இது ஒரு தனிப்பட்ட விருப்பம் என்று வாதிடுகின்றனர். எதுவாக இருந்தாலும், அழகு என்பது தோற்றத்தில் இல்லை, மனதில்தான் இருக்கிறது என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை சமூகத்தின் முன் கேள்வியாக எழுப்பியுள்ளது. ஒரு பெண்ணின் ஆரோக்கியம் மற்றும் உணர்வுகளை விட புற அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது வருத்தமளிப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
