கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், மனித வள மேம்பாட்டு மேலாளராகப் பணியாற்றிய பாபு தாமஸ் என்பவர், அங்கு பணிபுரிந்த கன்னியாஸ்திரிக்குத் தொடர்ச்சியாக ஆபாசப் படங்கள் மற்றும் காணொலிகளை அனுப்பிப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் அளித்த புகாரின் பேரில், பாபு தாமஸ் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து சங்கனாச்சேரி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.

பாபு தாமஸிடம் இருந்த செல்போனைப் பறிமுதல் செய்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் அந்த கன்னியாஸ்திரிக்கு மட்டுமன்றி மேலும் பல பெண்களுக்கு இது போன்ற ஆபாசச் செய்திகளையும் காணொலிகளையும் அனுப்பித் தொந்தரவு கொடுத்து வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், பின்னர் சிறையில் அடைத்தனர். மருத்துவமனையில் மேலாளர் பொறுப்பில் இருந்த ஒருவரே, சக ஊழியரான கன்னியாஸ்திரிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.