மும்பை மகாலட்சுமி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கியுள்ள லொல்லாபலூசா இந்தியா 2026 இசைத் திருவிழாவில், அமெரிக்க ராப் பாடகர் பிளேபாய் கார்டியின் இசை நிகழ்ச்சியின் போது தனக்குப் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக இளம்பெண் ஒருவர் சுமத்தியுள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளத்தில் இது குறித்து காணொளி வெளியிட்டுள்ள அந்தப் பெண், கூட்ட நெரிசலைப் பயன்படுத்திக் கொண்ட நபர் ஒருவர் தனது ஆடையினுள் கையை விட்டு அநாகரீகமாக நடந்து கொண்டதாகக் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார். நெரிசல் மிகுந்த பகுதியில் நகரக் கூட முடியாத நிலையில் தான் இருந்ததாகவும், அங்கிருந்த இருவர் தலையிட்டு அந்த நபரைத் தள்ளிவிட்ட பிறகுதான் தப்பிக்க முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
படித்தவர்கள் கூட இத்தகைய கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவது வருத்தமளிப்பதாகக் கூறியுள்ள அவர், இது ஒரு விபத்தல்ல, திட்டமிட்ட அநாகரீகம் எனச் சாடியுள்ளார். பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த பொது இடத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் இசை ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
