முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, கட்சியை ஒருங்கிணைப்பதாகக் கூறி ‘தர்மயுத்தம் 2.0’ தொடங்கித் தனி அமைப்பை உருவாக்கினார்.
ஆனால், தற்போது அவரது முக்கிய ஆதரவாளர்கள் அடுத்தடுத்து மாற்றுக் கட்சிகளுக்குத் தாவி வருவது அவருக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அவரது வலதுகரமாகக் கருதப்பட்ட வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் மற்றும் மருது அழகுராஜ் ஆகியோர் திமுகவில் இணைந்து ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
ஓபிஎஸ் அணியின் மூத்த நிர்வாகிகளான ஜே.சி.டி.பிரபாகரன் மற்றும் கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். அதேபோல், ஓபிஎஸ் வெளியேற முக்கியக் காரணமாக இருந்த மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் தற்போது எடப்பாடி பழனிசாமி பக்கம் சாய்ந்துள்ளார்.
பெங்களூரு புகழேந்தி போன்ற தீவிர ஆதரவாளர்களும் அணியை விட்டு வெளியேறி அமைதி காப்பதால், ஓபிஎஸ் அரசியலில் தனித்து விடப்படுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போது உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பன் மட்டுமே ஓபிஎஸ் உடன் இருக்கும் நிலையில், அவரது ஒருங்கிணைப்பு முயற்சி தோல்வியடைந்துவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகத் தீர்க்கமான முடிவுகளை எடுக்க ஓபிஎஸ் தயங்குவதே இந்த சரிவுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்த இக்கட்டான சூழலில், ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
